இந்திய அஞ்சல் துறையில் தபால் பிரிக்கும் பணிக்கு தேர்வான 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது பாஜக மோடி அரசு. மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்தாமல் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்துவதாக பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் தமிழ்நாட்டிற்கான தபால் பிரிப்பு பணிக்கு மொத்தம் 946 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளதாகவும், ஏன் இந்த பாகுபாடு எனவும் மதுரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள 946 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலின் நிலைமை இது.

மத்திய பணியாளர் தேர்வு (Staff Selection Commission) 2018 அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டு இருப்பவர்கள். பெயர்களை வாசித்தால் கல்பித், பவார், சிபு, அனூப், சாகா, மண்டல், சிங், லங்கா, பூனம், நீட்டு, மிஸ்ரா, பண்டிட், கௌரவ், சிபு, மித்ரா, குப்தா… இப்படியே நூற்றுக் கணக்கில் உள்ளது.

கண்ணை விரித்து விரித்து தேடினால் எங்காவது முனியசாமி, கணேச பாண்டி, ராஜாராம் என்ற ஒரு சில தமிழ்ப் பெயர்கள் மட்டுமே உள்ளன. இவர்கள் தான் தமிழ்நாட்டில் உள்ள 57 அஞ்சல் கோட்டங்களில் சிற்றூர்களில் உள்ள தபால்களை பிரித்து தரப் போகிறார்கள். முகவரிகளையாவது வாசிக்க முடியுமா இவர்களால்.

நாம் இந்தியர்கள் எல்லோரையும் நேசிக்கிறோம். ஆனால் மக்கள் சேவை எனும்போது மாநில மொழி தேர்ச்சி அவசியம் அல்லவா? வேலைவாய்ப்பு எனும் போது எல்லாவற்றையும் இந்தி பேசும் மாநிலங்களே தட்டிச் செல்கிற வகையில் தேர்வு முறைமை இருப்பது நியாயமா?

946 பேர் கொண்ட பட்டியலில் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் பட்டியல் தனியே தரப்பட்டுள்ளது நல்லது. அதுபோல ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டு பிரிவினர் பட்டியல் தனியே தரப்பட வேண்டாமா? சமூக நீதி உறுதி செய்யப்படுகிறதா என்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா?

மாநில மொழி அறிவு தேர்வு முறைமையில் இடம் பெற வேண்டும். தேர்வுகள் மையப்படுத்தப்படாமல் மாநில அளவில் நடத்தப்பட வேண்டும். இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.