பயம் காரணமாக அரசியல்வாதிகள் தான் சினிமாவை அழிக்க நினைக்கிறார்கள் என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “காப்பாத்துங்க நாளைய சினிமாவை”. தமிழ் திரையுலகின் பொதுநலன் கருதி, திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரு மணி நேர விழிப்புணர்வு படமாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சினிமா நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுவதாகக் கூறினார்.
மேலும் எத்தனை படங்கள் எடுத்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்பே தமிழ் ராக்கர்சில் வெளியாகிறது. அவன் சொல்லி அடிக்கிறான்.
இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். எத்தனை முறை ஆட்சி மாறினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. சினிமாவில் இருந்து முதலமைச்சரானவர்களும் சினிமாவை வளர்க்க நினைக்கவில்லை என்று கூறிய அவர், எங்கே வளர்த்து விட்டால், முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விடுவார்களோ என்று நினைப்பதாகவும் விமர்சித்தார்.
மேலும் தமிழ்ராக்கர்ஸ்க்கு அரசியல்வாதிகள் தான் ஏஜெண்டாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இல்லை என்றால் அவர்களால் இத்தனை தைரியமாக செயல்பட முடியாது. அரசியலில் நல்லவர்கள் இப்போது இல்லை.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் தவறாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ளும் என நினைக்கிறேன். கூடிய விரைவில் நாம் எல்லோரும் காவியை கட்டிக்கொண்டு தான் அழையப் போகிறோம் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.