இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் 85 ரூபாயை தாண்டியும் ரூ.78க்கு டீசல் தாண்டியும் விற்பனை..ஆனால் இதறுக்கு காரணம் பாஜக அரசு இல்லை சொல்கிறார் சட்ட அமைச்சர் ரவிஷங்கர் .காரணம் சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன என்கிறார்.
ஆனால், மத்திய அரசு தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் சென்றுகொண்டிருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை உயர்த்தி வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 15 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் முந்தைய நாள் விலையை காட்டிலும் இன்று 16 காசுகள் உயர்ந்து, 85 ரூபாய் 31 காசுகள் என பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், டீசலின் விலையும் அதிகரித்தது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 77 ரூபாய் 94 காசுகள் என விற்பனை ஆனது. இன்று டீசலின் விலை 6 காசுகள் உயர்ந்து, 78 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் கடந்த 7-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாய் 13 காசுக்கும், டீசல் 76 ரூபாய் 17 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 10 நாட்களுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரையிலும், டீசல் விலை 1 ரூபாய் 71 காசு வரையிலும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே, ‘நான் ஒரு மந்திரி. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை. மந்திரி பதவியை இழந்தால் நான் விலைஉயர்வால் பாதிக்கப்படலாம்’ என்று நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மந்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ராம்தாஸ் அதவாலே நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக மும்பையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். சாமானிய மக்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் பாஜகவின் மந்திரிகள் அதனை தடுக்க வழி செய்யாமல் கேலியும் கிண்டலுமாக பேசி வருகிறார்கள் என்று வருத்தமுடன் சமூகவலை தளத்தில் பதிவுகள் வர தொடங்கி உள்ளன .
மேலும் மன்மோகன்சிங் ஆட்சியில் சர்வதேச ஆயில் 120$ விற்றபோது 72ரூ கிடைத்த பெட்ரோல் இப்போது சர்வதேச ஆயில் 74$ விற்கும் போது 85ரூ ஏன் என்றும் இதன் பின்னால் ஊழல் எதாவது உள்ளதா என்றும் கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர் . மேலும் பெட்ரோல்-டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.