‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கேரள மாநிலத்தில் ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில், வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் நிஜாம் பாஷா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட டிரெயிலர் காட்சிகளில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது வழக்கறிஞர் நிஜாம் பாஷா வாதிடுகையில், கேரளா ஸ்டோரி படத்தில் மதத்துக்கு எதிரான வகையில் மோசமான வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. இது, முற்றிலும் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான ஆடியோ-வீடியோ பிரச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

அந்தப் படத்தின் டிரெயிலர் காட்சிகளை 1.6 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள நிலையில், மத துவேஷத்தை தூண்டும் வகையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவிருப்பதால் அதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்றார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது, வெறுக்கத்தக்க பேச்சுகளில் பலவகைகள் உள்ளன. இந்தப் படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் உரிய அனுமதியையும், சான்றிதழையும் வழங்கியுள்ளது. படத்தை வெளியிட தடை கோர விரும்பினால் அதற்கு வழங்கப்பட்ட சான்றிதழை எதிர்த்து உரிய அமைப்பில் முறையீடு செய்யவேண்டும்.

இந்த மனுவை தற்போது விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அனைவரும் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடத் தொடங்கி விடுவார்கள். எனவே படத்துக்கு தடை கோரும் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, பேசிய வழக்கறிஞர் கபில் சிபல், உரிய அமைப்புகளை அணுகி இப்பிரச்சனைக்கு தீர்வு காண தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்தை திரையிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாநில உளவுத் துறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.