கங்காரு நீதிமன்றம் நடத்தும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
கங்காரு நீதிமன்றம் என்பது சட்ட அங்கீகாரமில்லாத நீதிமன்றம். அதாவது அரசியல்வாதிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதையே கங்காரு நீதிமன்றம் என்று விமர்சிக்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, “சமீபகாலமாக, ஊடகங்கள் தாமதமாக முன்வந்து கங்காரு நீதிமன்றங்களை நடத்துவதை நாம் காண்கிறோம். அனுபவம் மிக்க நீதிபதிகளால் கூட தீர்வை கண்டறிய சிரமப்படும் விஷயங்கள் குறித்து ஊடகங்கள் சில நேரங்களில் விவாத நிகழ்ச்சிகள் மூலம் கங்காரு நீதிமன்றம் நடத்துவதை நாம் பார்க்கிறோம்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஊடக விவாதங்கள் வழிகாட்டியாக இருக்க முடியாது. நீதி வழங்க வேண்டிய விஷயங்களில், தவறான தகவல்கள், கொள்கைகளுடன் கூடிய விவாதங்கள், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு கேடு விளைவிப்பதாக இருக்கின்றன.
ஊடகம் மூலம் பரப்பப்படும் பாரபட்சத்துடன் கூடிய தகவல்கள் ஜனநாயகத்தை பலவீனமாக்குகின்றன ஊடகங்கள் தங்கள் பொறுப்புகளை மீறி செயல்படுவதன் மூலம், நமது ஜனநாயகத்தை இரண்டு படிகள் பின்னோக்கி கொண்டு செல்கின்றன.
அச்சு ஊடகங்களுக்கு இன்னும் குறிப்பிட்ட அளவு பொறுப்பு உள்ளது, அதேசமயம் ஆனால், எலக்ட்ரானிக் ஊடகங்களுக்கு சுத்தமாக பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம். ஊடகங்கள் சுயஒழுங்குமுறையுடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும். எலக்ட்ரானிக் மற்றும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விவகாரம் நீதித்துறையில் மிகப் பெரிய சவாலாக உள்ளது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை நீதிபதிகளால் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. பிரச்சினைகள் மற்றும் சுமைகளில் இருந்து சமூக அமைப்பை காக்க, முக்கியமான விஷயங்களுக்கு நீதிபதி முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி ரமணா குறிப்பிட்டுள்ளார்.