9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 15 ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன. திமுக கூட்டணியை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலை போல் இதிலும் வெற்றி வாகை சூட ஆயத்தமாக இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் இருந்த பாமக விலகிய நிலையில், பாஜகவுடன் இணைந்து அதிமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கின்றது. இது தவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில் திடீரென நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதில் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். ஆனால் நடிகர் விஜய்யின் பெயர் மற்றும் மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட காலம் வற்புறுத்தி வந்தனர். ஒரு வழியாக அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினிகாந்த், இறுதியில் அரசியலே வேண்டாம் என்று தெளிவாக அறிவித்து விட்டார்.
ஆனால் நடிகர் விஜயை பொறுத்தவரை தான் அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே வேளையில் அரசியல் வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. விஜய் நேரடியாக அரசியல் பேசாவிட்டாலும், தனது படங்கள் மூலம் அரசியல் பேசி வருகிறார்.
தலைவா படம் தொடங்கி மெர்சல், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் அரசியல் பேசுவது போல் இருந்ததால் சர்ச்சையானது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் முழு சம்மதத்துடன் தான் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தனது பெயரைப் பயன்படுத்தி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேர் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு: சர்ச்சையில் நடிகர் விஜய்