ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற்றுள்ள வருமானத்தில் நலிந்த உயர் சாதி பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி விஜய் ருபானி அறிவித்துள்ளார்.
 
முன்னதாக மே 1, 2016 அன்று அதாவது குஜராத் சட்ட மன்ற தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்பு, ஆண்டு வருமானம் 6 லட்ச ரூபாய்வரையுள்ள உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு என அவசர சட்டத்தை பிறப்பித்தது குஜராத் அரசு.
 
‘இது அரசியலமைப்பு சட்டத்திற்கே விரோதமானது’ – என சொல்லி அதை ரத்து செய்தது குஜராத் உயர்நீதிமன்றம். இப்போதும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ..
 
பொதுப் பிரிவினரில் (உயர் சாதியினருக்கு) பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா சமீபத்தில் நிறைவேறியது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார்.
 
இதைதொடர்ந்து, அவரது ஓப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் (Gazette Notification) வெளியானது. இதன்மூலம் நாடு முழுவதும் நேற்றிலிருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.
 
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானி இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சட்டத்தை முதன்முதலாக நடைமுறைப்படுத்தும் மாநிலமாக குஜராத் சிறப்பிடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.