திருமணிமுத்தாறு நதி மாசடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சேலம் மாநகராட்சி இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
திருமணிமுத்தாறு நதி, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் உள்ளாட்சிகளின் சாக்கடைகளும் கலப்பதால், இந்த நதி மாசடைந்து விட்டதாக வி.மாணிக்கம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பாய நீதிபதிகள் கூறிய தீர்ப்பில் ” நகர்ப்புறங்களில் உற்பத்தி ஆகும் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் கலக்கிறது. இதனால், அந்த நீர்நிலைகள் மாசடைகின்றன. மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைகின்றன.
இது, பெரும் கவலைக்குரிய விஷயம். சுற்றுச்சூழல் விதிமுறைகளை மதிப்பது மிகவும் குறைவாக உள்ளது. இதனால், மரண எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நீர், நிலம், காற்றும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இந்த வழக்கை பொறுத்தவரை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக சேலம் மாநகராட்சி இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும்.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ரூ.50 லட்சம் உத்தரவாத தொகையையும் சேலம் மாநகராட்சி செலுத்த வேண்டும். சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றப்படாது என்றும், அதை தடுக்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்து செயல்படுத்த வேண்டும். அப்படி செய்ய தவறினால், ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்படும்.
தற்போதைய நிலவரத்தை அறிய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கூட்டாக ஆய்வு செய்து, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு சேலம் மாநகராட்சி ஆணையரை சாரும். பணத்தை செலுத்த தவறினால், சேலம் மாநகராட்சி ஆணையர் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 10–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதற்கிடையே, கங்கை கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்காததற்காக, பாஜக வின் யோகி தலைமையில் ஆன உத்தரபிரதேச அரசுக்கும் பசுமை தீர்ப்பாயம் ரூ.25 லட்சம் அபராதம் விதித்துள்ளது.