இயக்குனர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் (ஜெ.அலெக்சாண்டர்,) புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலககில் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இவர் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், வசன கர்த்தா, நடிகர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். தெறி, பேட்ட, பூமராங், சீதக்காதி, மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் ஸ்டைல், உடல் மொழி ஆகியவற்றிற்கு மூல காரணமே மகேந்திரன் என்று கூறப்படுகிறது. ரஜினியின், முள்ளும் மலரும் படத்தின் போது கற்றுக் கொடுத்தவற்றை தற்போது வரை ரஜினி கடைபிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மகேந்திரன் தற்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டதால் டையாலிசிஸ் செய்யப்பட்டதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவரது மகன் ஜான் மகேந்திரன் டுவிட்டரில் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில், மகேந்திரனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ரஜினிகாந்த், அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.