சிபிஐ தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மேற்கு வங்க காவல்துறை ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் சிபிஐ அதிகாரிகளுக்கு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சிபிஐ தொடர்ந்த வழக்கு குறித்து மேற்கு வங்க முதன்மைச் செயலரும், காவல்துறை டிஜிபி மற்றும் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் பிப்ரவரி 18ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பிப்ரவரி 20ம் தேதியன்று நடைபெறும் விசாரணையன்று 3 பேரும் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு நேரில் சென்றதோடு, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
3-வது நாளாக மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது. அவருடைய கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் போது மம்தா பானர்ஜி பேசியதாவது: சிபிஐ விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என சொல்லவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் எங்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. போலீஸ் கமிஷனரை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்.
அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். நீதித்துறை மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் நாங்கள் மிகவும் மரியாதை காட்டுகிறோம்.
இதன் மூலம் உச்சநீதிமன்றத்துக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் என கூறினார். மேலும் மூன்று நாட்களாக நடந்து வந்த போராட்டத்தை இன்றுடன் முடித்து கொண்டார் மம்தா பானர்ஜி.