நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் உத்தரப்பிரதேச மாநில போலீஸுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் அதிகாலையில் காவல் துறையினரே பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
இந்த வழக்கில் அந்த பெண்ணின் இறுதிச் சடங்குகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும் எதிர்மறையாக பதில் அளித்த உத்தரப்பிரதேச மாநில காவல் துறையினருக்கு ஏற்கெனவே நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மிதல், ரஞ்சன் ராய் அமர்வு, உங்களது மகள் இறந்து இருந்தால் இதுபோன்று இரவோடு இரவாக உடலை எரிக்க அனுமதித்து இருப்பீர்களா? அல்லது ஒரு பணக்கார வீட்டின் பெண் இறந்து இருந்தால் இதுபோன்று தான் இறுதிச் சடங்கு நடத்துவீர்களா என்று உத்தரப்பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபி பிரசாந்த் குமாரிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கில் ஆஜராகுமாறு மாநில கூடுதல் தலைமைச் செயலாளர், டிஜிபி, ஹத்ராஸ் மாவட்டக் கலெக்டர், எஸ்பி, சட்டம் ஒழுங்கு ஏடிஜி ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இறந்த தலித் பெண்ணின் குடும்பத்தினரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே விசாரித்தால் நீதி கிடைக்காது என்றும், வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் இறந்த பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். மேலும், இந்த வழக்கு முடியும் வரை தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், சிபிஐ விசாரணையில் ரகசியம் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த வழக்கில் ஆஜரான ஹத்ராஸ் மாவட்டக் கலெக்டர் பிரவீண் குமார் லக்ஷர் கூறுகையில், “இரவில் உடலை எரிக்க உத்தரவு பிறப்பித்தது நான்தான். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த அவ்வாறு செய்தேன்” என்றார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு; உத்தர பிரதேசத்தில் தொடரும் அவலம்