மத்திய கிழக்கு பகுதியில் ஈரானின் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில் தான் அமெரிக்க போர் கப்பல்கள் இருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் நலன்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா விலகியது.
 
இந்த நடவடிக்கை இருநாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு வழிவகுத்தது. ஈரான் மீதான கடுமையான பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, ஈரானிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தடை போட்டது.
 
அத்துடன் ஈரானை அச்சுறுத்தும் விதமாக மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
 
இந்த நிலையில், ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ளன என்றும், ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரம்) மேல் உயர்த்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
 
ஈரானின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ராணுவ ஆலோ சகரான யாஹ்யா ரஹீம் சபாவி இது குறித்து கூறியதாவது:-
 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில், ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ளன. இது பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு கடற்படையினருக்கும் தெரியும்.
 
தங்கள் படையின் முழுமையான பலம் என்னவென்று அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். பாரசீக வளைகுடாவில் முதல் தோட்டா சுடப்படும்போது எண்ணெய் விலை 100 டாலருக்கும் மேலாக உயரும்.
 
இது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு தாங்க முடியாததாக இருக்கும்.
 
இதற்கிடையில் ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, “அமெரிக்கா கவுரவமாக நடந்துகொண்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கலாம், ஆனால் டெஹ்ரான் தானாக சென்று பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காது” என்றார்.
 
ஈரான் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் பாகெரி இது பற்றி கூறுகையில், “ஈரானின் ஏவுகணை திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கைவிடப்படாது, அதே நேரம் ஈரானின் தற்காப்பு திறன்களில் இருந்து நாடு ஒருபோதும் பின்வாங்காது” என கூறினார்.