உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்களை கடத்தி வன்கொடுமை செய்வேன் என துறவியான மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளநிலையில், அவரை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் உ.பி. காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூரில் மஹரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை பதவியில் சாமியார் மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சீதாபூரில் நடைபெற்ற ஒரு இந்துக்களின் ஆன்மீக ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
மஹந்த் பஜ்ரங் முனி சென்ற வாகனத்தில் ஏகே 47 துப்பாக்கிகள் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஊர்வலம் சீதாபூரின் கைராபாத் பகுதியின் மசூதியை கடந்து சென்றது.
அப்போது தம் வாகனத்தில் அமர்ந்தபடி பேசிய மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் கூறும்போது, “இதை நான் மிகவும் அன்பான வார்த்தைகளால் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கைராபாத்தில் ஒரு இந்து மதத்தின் பெண்ணாவது கேலி செய்யப்பட்டால், இஸ்லாமிய பெண்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்வேன்” என பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
இவரின் அந்தப் பேச்சைக் கேட்ட அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மிரட்டலின் வீடியோ காட்சிகள், சமூகவலை தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலானது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, 8.4.2022 அன்று உத்தரப் பிரதேச காவல்துறை டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இதுபோன்ற நடவடிக்கைகளை கேள்விப்பட்டு காவல்துறையினர் மவுனம் காக்கக் கூடாது,
உடனடியாக மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதுபோன்றவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டியது தம்முடைய கடமை எனவும் ரேகா சர்மா குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, 6 நாட்களுக்கு பிறகு துறவி பஜ்ரங் முனி மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சீதாபூரின் வடக்கு காவல்துறை ஆணையர் ராஜீவ் தீட்ஷித்திடம் ஒப்படைக்கப்பட்ட்டுள்ளதாக தங்கள் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்ட சீதாபூர் காவல்துறை, இதில் கிடைக்கும் ஆதாரங்களின் பேரில் மஹந்த் பஜ்ரங் முனி மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட் டிருந்தனர்.