அரபு நாடுகளை தொடர்ந்து தற்போது கனடாவும் இஸ்லாமியர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்தியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கி உள்ளது.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து உள்ளதாக ஐக்கிய அரபு நாடுகள் உட்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக புகார் அளித்து வருகிறது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை தூண்டி விடப்படுகிறது. அரசு இதை கண்டுகொள்ளவில்லை என்று அரபு நாடுகள் புகார் வைக்க தொடங்கி உள்ளது.
ஐக்கிய அரபு நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொழில் அதிபர்கள் தொடங்கி ராஜ குடும்பத்தில் இருக்கும் இளவரசி ஹேண்ட் அல் குசாமி உட்பட பலர், இந்தியாவின் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
மேலும் வாசிக்க: ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பரப்பினால் விசா ரத்து, கைது- எச்சரிக்கப்படும் இந்திய வெளிநாட்டவர்கள்
இந்நிலையில் கனடாவின் பிராம்டன் மாகாணத்தில் 1984ல் கொண்டு வரப்பட்ட ஒலி அளவு தொடர்பான சட்டம் ஒன்றில் தற்போது திருத்தும் கொண்டுவரப்பட்டு, அதன்படி மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. முன்பு சர்ச் மணிகளுக்கு மட்டும் இருந்தே அனுமதி தற்போது மசூதிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
பிராம்டன் ஆளுநர் பேடிரிக் பிரவுன் இதுகுறித்து, ‘இஸ்லாமியர்கள் இனி அசான் செய்ய முடியும். நாம் 2020ல் இருக்கிறோம். நாம் எல்லோரையும் ஒற்றுமையாக நடத்த வேண்டும்’ என்று மிகவும் உருக்கமாக டிவிட்டரில் கூறியிருந்தார். மசூதிக்கு ஒலிபெருக்கி வைக்க அனுமதிக்கும் இந்த சட்ட திருத்தமும் அவரின் டிவிட்டும் பெரிய வரவேற்பை பெற்றது.
ஆனால் கனடாவில் ரியல் எஸ்டேட் வேலை பார்க்கும் இந்தியரான ரவி ஹூடா இதற்கு எதிராக வெளியிட்ட பதிவில், “என்ன தவறான முடிவு இது? அடுத்து என்ன? சாலையில் ஒட்டகம் ஓட்ட தனி பாதை அமைப்பீர்களா? வீட்டில் விலங்குகளை கொல்ல அனுமதி அளிப்பீர்களா? அல்லது பெண்கள் எல்லோரும் உடல் முழுக்க மூடி பர்தா அணிய சட்டம் கொண்டு வருவீர்களா?” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு முன்பே ரவி ஹூடா இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறைய பதிவுகளை பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த டிவிட் வைரல் ஆனது. கனடாவில் இருக்கும் நடுநிலை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் எல்லாம் ஹுடாவை கேள்விகளால் துளைத்தது. ஹூடா என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியில் தனது டிவிட்டை டெலிட் செய்தார்.
ஆனால் அவர் வேலை பார்க்கும் RE/MAX. நிறுவனத்தை டேக் செய்து பலரும் கேள்வி கேட்க தொடங்கினார்கள். இதன் முடிவில், RE/MAX நிறுவனம் தற்போது ஹூடாவை பணி நீக்கம் செய்துள்ளது. அதில், ஹூடாவின் கருத்துக்கும் எங்களுக்கு தொடர்பவில்லை. அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டோம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று RE/MAX நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அவர் கனடாவில் பீல்ஸ்கூல் என்ற பள்ளி கழகம் ஒன்றில் உறுப்பினராக இருக்கிறார். இந்த குழுவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை நடக்கும் என்றும் கூறுகிறார்கள். அதே போல் இவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கனடாவில் இப்படி இந்தியர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய டிவிட்கள் எல்லாம் தற்போது தூர் வாரப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது. கனடாவில் இருக்கும் வலதுசாரிகள் பலர் இதனால் தங்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இதே போல் பல வலதுசாரிகள் பணியை இழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கனடாவும் சில இந்தியர்களுக்கு எதிராக தனது சாட்டையை சுழற்ற தொடங்கி உள்ளது.