இஸ்ரேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்றுப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அபு தாபி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் ஜாயத் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “இது ராஜீயத்துக்கும் பிராந்தியத்துக்குமான வெற்றி, இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம், மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்தும்.

இந்த உடன்பாட்டின் விளைவாக, ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் பெரும்பாலான பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை இஸ்ரேல் இடைநிறுத்தும். மேலும் பிராந்திய பதற்றங்களை குறைத்து, சாதகமான மாற்றத்துக்கான புதிய சக்தியை இந்த உடன்பாடு உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையே மேற்கொள்ளப்படும் மூன்றாவது உடன்பாடு இதுவாகும். இஸ்ரேல் சுதந்திரத்துக்குப் பிறஎகிப்துடன் 1979 ஆண்டிலும், அதன் பிறகு 1994-ஆம் ஆண்டில் ஜோர்டானுடனும் இஸ்ரேல் இதுபோன்ற அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

புதிய உடன்பாட்டைத் தொடர்ந்து, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் உயர்நிலை பிரதிநிதிகள் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படும். அப்போது முதலீட்டுத்துறை, சுற்றுலா, சுகாதாரம், கலாசாரம், சுற்றுச்சூழல், பரஸ்பரம் தூதரகங்கள் அமைத்தல் போன்றவை தொடர்பாக இரு தரப்பும் முறைப்படி ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்.

https://twitter.com/realDonaldTrump/status/1293922936609546240?s=20

இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின்படி, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஒரு பிரத்யேக கேந்திர கொள்கையை வகுக்கும் அமெரிக்க திட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் ஆகியவை இணையவுள்ளது.

தாங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், வாய்ப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால், ராஜீய அளவிலான பங்கேற்பு, நீடித்த பொருளாதார ஒத்துழைப்பு, நெருக்கமான பாதுகாப்பு ஆகியவை தொடர்பான திட்டங்களை இனி இந்த நாடுகள் இணைந்து ஊக்குவிக்கும்” என்று தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.