பட்டினியால் வாடும் ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் அளவுகள் குறைக்கப்பட்டு நேரமும் குறைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழிற்சாலைகள், தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் தினக்கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பலகோடி மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்து உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு கிடைப்பதை இப்போதைய நேரத்தில் அரசுகள் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
மேலும் வாசிக்க: 3 மாதங்களில் 3 கோடி மக்கள் பட்டினி இறப்பு- ஐ.நா.சபை WFP எச்சரிக்கை
தமிழகத்திலும் இதுபோன்று சாலையோரத்தில் வசிப்பவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் உண்ண உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். ஆகையால், அரசின் அம்மா உணவகத்தின் மூலம் கொரோனா தாக்கம் முடியும் வரை ஏழை எளியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
இது ஏழை மக்களுக்கு உதவும் அறிவிப்பாக இருந்தாலும், அதிலும் பல குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்துவருகின்றன. பொதுவாக அம்மா உணவகங்களில் வரும் மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப கணித்து உணவு தயாரித்து விநியோகம் செய்து வரப்பட்டது. அதிலும் பல நேரங்களில் மிகக் குறைந்த அளவே உணவு தயாரிக்கப்பட்டதாக கூறிவந்தனர்.
தற்போது, இலவசமாக உணவு வழங்கப்படும் என்பதால், அதன் அளவு குறைக்கப்பட்டதோடு, எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர். திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் அளவுகள் குறைக்கப்பட்டு நேரமும் குறைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
காலை 9 மணிக்குள் இட்லியும், நண்பகல் 12 மணிக்குள் சென்றால் மட்டுமே சாப்பாடும் கிடைக்கப்பெறுகிறது. கொஞ்சம் தாமதமாக வந்தாலும் உணவு கொடுக்க பணியாளர்கள் மறுக்கின்றனர். அதேபோல, அம்மா உணவகங்களில் இரவு நேரங்களில் வழங்கப்பட்டு வந்த சப்பாத்தியும் தற்போது முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சப்பாத்திக்கு பதிலாக கலவை சாதம் வழங்கப்படுகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக அம்மா உணவக ஊழியர்கள் கூறும்போது, இலவசமாக உணவு வழங்குவதால் குறைந்த அளவிலேயே தயாரித்து விநியோகிக்க வேண்டும் என தங்களது உயர்திகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளனர். இலவசமாக உணவு அளிக்கப்படுமென அறிவித்துவிட்டு, நேரத்தை குறைத்தால் முழு ஊரடங்கு சமயத்தில் மக்கள் சாப்பாட்டுக்கு எங்கேச் செல்வார்கள்.. என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் அதிமுகவினர் அரசியல் செய்வதை விடுத்து ஏழை மக்களின் பசியை போக்குவதற்கான வழியை பார்க்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.