அரசு உயர் மட்ட கூட்டங்களின் பொழுது ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை அணியக் கூடாது என்று அரசு உயர் அதிகாரிகளுக்கு பாஜக ஆளும் திரிபுரா மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இது தொடர்பாக மாநில நிதி, கல்வி, மற்றும் கலாச்சாரத் துறை முதன்மைச் செயலாளரான சுஷில் குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாவட்டத்திற்கு தலைமையாக இருக்கக் கூடிய மாவட்ட தலைமை நீதிபதிகள், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் ஆகிய இருவரும், மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் தலைமை வகிக்கும் உயர் மட்ட கூட்டங்களில் ஆடைக் கட்டுப்பாடு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுவான உடைகளான ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேண்ட்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த மூன்று தலைமுறைகளாக அரசுப் பணியில் இருக்கும் நான், எந்த ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியோ அல்லது மத்திய அரசு அதிகாரியோ அலுவலகங்களுக்கு டெனிம் பேண்ட் உள்ளிட்ட பொதுவான ஆடைகளை அணிந்து வந்ததை பார்த்தது கிடையாது.

மேலும் கூட்டங்கள் நடைபெறும் பொழுது சில அரசு அதிகாரிகள் தங்களது அலைபேசிகளில் செய்திகளை பார்த்துக் கொண்டும், செய்திகளை அனுப்பிக் கொண்டும் இருப்பது அவமரியாதையான செயலாகும். என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பலவித சர்சைகளை அம்மாநிலத்தில் தற்போது எற்படுத்தி வருகிறது .முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே போல் ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை அணியக் கூடாது, குளிர் கண்ணாடிகளை அணியக் கூடாது என்று ஒரு அறிக்கை பாஜக ஆளும் மத்தியப்பிரதேச அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.