இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக அவரது செயலர் உதயா ஆர். சேனேவிரத்னே மூலமாக அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டது.
முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 16-ஆம் தேதி வரையில் முடக்கி சிறீசேனா உத்தரவிட்டிருந்தார். இச்சூழலில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அவருக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், வரும் 7-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுமென கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்தனே பொறுப்பேற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று அவர் பதவியேற்றார். இலங்கையில் தற்போது 2 பிரதமர்கள், 2 சபாநாயகர்கள் இருப்பதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது
இந்த சூழ்நிலையில் ராஜபட்சவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என்று அதிபர் சிறீசேனாவுக்கு இலங்கை சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அதிபர் சிறீசேனாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், பெரும்பான்மை உறுப்பினர்களின் கருதுக்களை எடுத்துக் கொண்டால் ராஜபட்சவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என்றும் .,
முதலில் இலங்கை நாடாளுமன்றத்தை 7ம் தேதி கூட்டுவதாக தெரிவித்துவிட்டு தாமதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபட்சவை பிரதமராக ஏற்க முடியாது என்றும் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேதான் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க இலங்கை அரசு தயாராகி வருகிறது.
புதிய பிரதமர் ராஜபட்சவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, ராஜபட்ச பிரதமராகப் பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ராஜபட்சவின் மகன், நமல் ராஜபட்ச, சுட்டுரையில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீண்ட நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகள் குறித்து அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும், பிரதமர் ராஜபட்சவும் இணைந்து ஆலோசித்து நல்லதொரு முடிவை விரைவில் அறிவிப்பர்.
தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்பட வேண்டும். கூட்டமைப்பில் இருக்கும் சிலருடைய சுயநலத்திற்காக, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அடையாளமாக இருக்கும் அந்தக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது என்பது தமிழ் மக்களை ஏமாளிகளாக மாற்றும் செயல் ஆகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 225 எம்.பி.க்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் ராஜபட்சவின் அணியில் 100 பேர் மட்டுமே இருக்கின்றனர்.
பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை 103 எம்.பி.க்கள் ஆதரிக்கின்றனர். இச்சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 16 பேர், இடதுசாரிகளின் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த (ஜேவிபி) 6 பேர் இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாக உள்ளனர்.நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில், வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக இரு கட்சிகளும் விளங்கும் எனத் தெரிகிறது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அணியை ஆதரிக்கிறதோ, அவர்களுக்கு வெற்றி உறுதி என்ற நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ராஜபட்சவின் அணிக்கு தாவிய தமிழ் எம்.பி.யான விளேந்திரியனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மீதமுள்ள 15 பேரில் மேலும் 4 தமிழ் எம்.பி.க்கள் ராஜபட்சவுடன் தொடர்பில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும்கூட பெரும்பான்மைக்குப் போதிய பலம் தேறாத நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பையும், ரணில் ஆதரவு எம்.பி.க்கள் சிலரையும் தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு ராஜபட்ச தரப்பு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தச் சூழலில்தான், சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக நமல் ராஜபட்ச சூசகமாகத் தெரிவித்துள்ளார்.