நீதிமன்றத்தை அவமதித்து பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை இந்துத்துவா தீவிரவாதி என்று கண்டித்துள்ளார் நடிகர் சித்தார்த்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே பள்ளிவாசல் இருக்கும் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான மேடை அமைக்க பாஜகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போலீஸாரை விமர்சித்ததோடு, உயர்நீதிமன்றத்தையும் சில மோசமான வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
உயர் நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் திட்டிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
வீடியோ பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ள ஹெச்.ராஜா, நான் நீதிமன்றத்தை மதிப்பவன். அது என் குரலே இல்லை, நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் சிலா் பரப்புகின்றனா் என்று தொிவித்துள்ளாா். முதலில் அட்மின், தற்போது டப்பிங்கா என்று சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஹெச். ராஜாவின் வீடியோ குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த், ஹெச்.ராஜாவை இடியட் என்றும், இந்துத்துவா தீவிரவாதி என்றும் விமர்சித்துள்ளார்.
சித்தார்த் தனது பதிவில், “போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுத் தள்ளும் தமிழக போலீஸார், இடியட் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றம், போலீஸார், சிறுபான்மையினர் குறித்து மோசமான வார்த்தைகளால் பேசுவதை வேடிக்கப் பார்ப்பதாக விமர்சித்துள்ளார். மேலும் இந்த இந்துத்துவா தீவிரவாதிக்கு சட்டமும், அரசியலமைப்பும் காட்டப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கண்டித்துள்ள சித்தார்த்தை பாராட்டி பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது மாணவி சோஃபியா கைது தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்பு செய்திக்கு: மீண்டும் பாஜகவிடம் மோதும் நடிகர் சித்தார்த்