காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.  
 
பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில்..  
 
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. இதனால் இந்திய எல்லையில் வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  
 
இந்திய விமானப்படையும் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளது. அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் கண்காணிப்பு பணியில் எம்.ஐ.–17 ரக ஹெலிகாப்டர் ஈடுபட்டு வந்தது.  
 
அந்த ஹெலிகாப்டர் காலை 10 மணி அளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கரேந்த் கலான் என்ற கிராமம் அருகே தரையில் விழுந்து இரண்டாக நொறுங்கி தீப்பற்றி எரிந்தது.  
 
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த காஷ்மீரை சேர்ந்த கிபாயத் ஹூசேன் கனாயே உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.இதில் இறந்த 6 பேர் விமானப்படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இச்சம்பவம் சதியா அல்லது விபத்தா என விசாரணை நடைபெற்று வருகிறது.