இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தனுஷ் நடித்த ‘அசுரன்’ மற்றும் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் ‘தேன்’ ஆகிய இரு தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.
இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. 51 வது பட விழா, நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக, விழா தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி, அடுத்த மாதம் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மொழித் திரைப்படங்களுடன் இந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படும்.
இந்நிலையில், இந்த விழாவில் திரையிட தேர்வான படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார். அதில் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன.
Happy to announce the selection of 23 Feature and 20 non-feature films in Indian Panorama of 51st IFFI. @MIB_India pic.twitter.com/Kx0acUZc3N
— Prakash Javadekar (@PrakashJavdekar) December 19, 2020
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம், வெகுஜன திரைப்படப் பிரிவில் திரையிடப்பட இருக்கிறது. அதேபோல் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேன்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில், தான் நடித்த அசுரன் படம் தேர்வாகி இருப்பது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், “IFFI 2020 இந்தியப் பிரிவில் அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற எங்கள் அனைவருக்கும் இது ஒரு கவுரவம். மக்களுக்கான ஒரு படத்தைத் தேர்வு செய்தமைக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
Asuran, at the indian panorama section of IFFI 2020. An honour for all of us involved in making the film. Thanks for selecting a film of the people.
— Dhanush (@dhanushkraja) December 20, 2020
மேலும் வெகுஜன திரைப்படப் பிரிவில், கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ள சிச்சோரே என்ற படமும், முகமது முஸ்தபா இயக்கத்தில், மலையாளத்தில் வெளியாகி கவனிக்கப்பட்ட கப்பேலா படமும் திரையிடப்படுகின்றன.