‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 30 லட்சம் குடும்பத்தை சேர்ந்த 1 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவுக்கே முன்னோடியாக மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கத்தை அறிந்து மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த திட்டம் மூலம் சிகிச்சை தேவைப்படுபவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களை கண்டறிந்தும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.
மக்களை தேடி மருத்துவம் என்ற சேவையின் மூலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 30 லட்சம் குடும்பத்தை சேர்ந்த 1 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனை போன்ற 40க்கும் மேற்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சையும் இத்திட்டத்தில் விரைவில் சேர்க்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மாற்ற இந்த புதிய திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் 25 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியாற்றுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், மருந்துகள், ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட சேவைகளை வழங்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தொடங்கி வைத்தேன்.
'அனைவருக்கும் நலவாழ்வு' என்ற உயரிய இலக்கை தமிழ்நாடு விரைவில் எட்டும்! pic.twitter.com/jqRPEW1Qon
— M.K.Stalin (@mkstalin) August 5, 2021
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “கடந்த 2.7.21 ஆம் தேதி துறை ரீதியிலான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்வர் தொற்று நோயற்ற நோய்களை கையாள்வதற்கும் பயனாளிகளின் வீட்டு வாசலில் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகளை நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன்படி தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய், சிறுநீரகநோய் உள்ளவர்களுக்கு, அவர்கள் வீடு தேடி சென்று மருந்து, மாத்திரைகளை வழங்குவது தான் தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.
அதாவது, தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு வந்து மருந்து, மாத்திரைகள் வாங்குபவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவப் பணியாளர்கள் நேரடியாக வழங்குவார்கள். இதுமட்டுமல்லாமல், சிறுநீரக கோளாறுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு, அவர்கள் வீட்டிற்கே கையில் எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய ‘போர்டபிள்’ டயாலிசிஸ் கருவியை கொண்டு சென்று சிகிச்சையளிப்பது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
இந்த திட்டம் நிச்சயமாக கிராமப்புற, மலைவாழ் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். ஆரம்பத்தில் 20 லட்சம் பேருக்கு இவ்வாறு வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் அளிக்கவும், தொடர்ந்து 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்வது என்பது, நிச்சயமாக பெரும் சிரமம். அவர்களுக்கு இந்தத்திட்டம் பெருமளவில் உதவியாக இருக்கும்.
கூடுதலாக இந்த திட்டம் திருநெல்வேலி, கோவை மற்றும் சென்னை மாநகராட்சிளில் 21 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொண்டு வரப்படும். 2021 ஆம் ஆண்டில் இறுதியில் மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது: முதல்வர் கடிதம்