இந்திய விமானப் போக்குவரத்து துறைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 2,300 விமானங்கள் தேவைப்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் விமான உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் (ஆசிய பசிபிக் மற்றும் இந்திய விற்பனை பிரிவு) மூத்த துணைத் தலைவர் தினேஷ் கேஸ்கர் கூறியதாவது:
இந்தியாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 1,940 சிறிய அளவிலான விமானங்களும், 350 பெரிய அளவிலான விமானங்களும் தேவைப்படும். இதன் மதிப்பு, ரூ. 22 லட்சம் கோடி (320 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் 10 பிராந்திய ஜெட் விமானங்களும் இந்தியாவுக்கு தேவைப்படும். இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும்போதிலும், இந்தியாவில் பெரும்பாலான விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் போதிய வருவாயை ஈட்டுவதில்லை.
விமான எரிபொருள் விலை, போட்டியால் பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட சில காரணங்கள் விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில்
உள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தினேஷ் கேஸ்கர் தெரிவித்தார்.