நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்கீடு மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பில் நிலவும் குளறுபடியை போக்கி ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள 12 பேர் கொண்ட உயர்மட்ட தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. நாடு முழுவதும் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி செல்கிறது. கொரோனா பாதிப்பால் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. சில மாநிலங்களில் கொரோனவால் உயிரிழந்தவர்களை எரியூட்டுவதற்கு இடம் இல்லாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், படுக்கை ஆகியவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நாளைக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறி நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் பரிதாப நிலை உள்ளது.
இந்நிலையில் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்த விசாரணையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜனின் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க தேசிய அளவிலான பணிக்குழுவை அமைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
இதுகுறித்து உச்சநீதிமன்ற உத்தரவில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவை, கள நிலவரம் உள்ளிட்டவற்றை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அவர்களுக்கான ஒதுக்கீட்டை சீரமைக்க 10 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் 2 அரசு அதிகாரிகளைக் கொண்ட தேசிய உயர்மட்ட குழுவை அமைத்து, இந்த குழுவுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளது.
அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவ்ஃபா தலைமையில் செயல்பட இருக்கும் 12 பேர் கொண்ட தேசிய பணிக் குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள்:
1. அமைச்சரவை செயலாளர்
2. மத்திய சுகாதாரத் துறை செயலாளர்
3. டாக்டர் பபாடோஷ் பிஸ்வாஸ், முன்னாள் துணைவேந்தர், மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், கொல்கத்தா
4. டாக்டர் தேவேந்தர் சிங் ராணா, தலைவர், மேலாண்மை வாரியம், சர் கங்கா ராம் மருத்துவமனை, டெல்லி
5. டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி, பெங்களூரு நாராயண ஹெல்த்கேர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
6. டாக்டர் ககன்தீப் காங், பேராசிரியர், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர், தமிழ்நாடு
7. டாக்டர் ஜே.வி. பீட்டர், இயக்குநர், கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, வேலூர், தமிழ்நாடு
8. டாக்டர் நரேஷ் ட்ரேஹான், குருக்ராம், மேடந்தா மருத்துவமனை மற்றும் இதய நிறுவனம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
9. டாக்டர் ராகுல் பண்டிட், கிரிட்டிகல் கேர் மெடிசின் மற்றும் ஐ.சி.யூ, ஃபோர்டிஸ் மருத்துவமனை, முலுண்ட் (மகாராஷ்டிரா) மற்றும் கல்யாண் (மகாராஷ்டிரா) இயக்குநர், மும்பை
10. டாக்டர் சௌமித்ரா ராவத், சர் கங்கா ராம் மருத்துவமனை, அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் கல்லீரல் மாற்றுத் துறையின் தலைவர் மற்றும் தலைவர், டெல்லி
11. டாக்டர் சிவ்குமார் சாரின், மூத்த பேராசிரியர் மற்றும் கல்லீரல் துறைத் தலைவர், இயக்குனர், கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் (ஐஎல்பிஎஸ்), டெல்லி
12. டாக்டர் ஜரிர் எஃப் உட்வாடியா, மார்பக நோய் மருத்துவ ஆலோசகர், இந்துஜா மருத்துவமனை, ப்ரீச் கேண்டி மருத்துவமனை மற்றும் பார்சி பொது மருத்துவமனை, மும்பை
இந்த குழு தங்களுக்கு தேவையான தகவல்களை பெறவும் கலந்தாலோசிக்கவும், எய்ம்ஸ், ஐசிஎம்ஆர், தரைவழி போக்குவரத்து துறை, நிதி ஆயோக் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளின் இயக்குனர்களையும் துறை ஊழியர்களையும் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
தற்போது மருத்துவ உள்கட்டமைப்பில் நிலவும் குளறுபடியை போக்க தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இந்த குழு மேற்கொள்ளும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.