கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் (92), இன்று (6.2.2022) காலை காலமானார். இதனையடுத்து இரு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ல் பிறந்தார் லதா மங்கேஷ்கர். பாலிவுட், கோலிவுட்டில் பிரபல பாடகியாக இருக்கும் ஆஷா போஸ்லே லதாவின் சகோதரியாவார்.
இந்திய திரையுலகின் இசைத் துறையில் 70 ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை கொடுத்து நைட்டிங்கேல், மெலடி ராணி போன்ற மரியாதைக்குரிய பட்டங்களை வென்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். 36க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் தனது இனியக் குரலால் 30000க்கும் மேற்பட்டபாடல்களை பாடியுள்ளார்.
இந்தியாவை உலகளவில் பெருமைப்படுத்தியதை கெளரவிக்கும் வகையில் லதா மங்கேஷ்கருக்கு 1989 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பாடகி ஆவார்.
மேலும், பிரான்ஸ் அரசு அவருக்கு 2007 ஆம் ஆண்டு அரசின் உயரிய சிவிலியன் விருதான ‘Officer of the Legion of Honor’ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது. மேலும், இந்தியாவின் 3 தேசிய விருதுகள், 15 பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதுகள், சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான பிரிவில் நான்கும், வாழ்நாள் சாதனையாளர் மற்றும் இரண்டு சிறப்பு விருது என ஃபிலிம் ஃபர்-ல் மட்டும் இத்தனை விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
சர்வதேச அளவில் 1974 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஆல்பர் ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர் லதா மங்கேஷ்கர். இசைஞானியான இளையராஜாவுக்கு மிகவும் பிடித்தமான பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தான். மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உடன்பிறவா சகோதரியாகவே இருந்தார்.
92 வயதாகும் இவருக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க அவரது உயிர் பிரிந்தது. லதா மங்கேஷ்கரின் மறைவு சினிமா பிரபலங்கல் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கர் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, மும்பை சிவாஜி பார்க் கொண்டு வரப்பட்ட லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, இரு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.