டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் முதல் பெண் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்துவரும் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் தற்போது புதுடெல்லி ஜேஎன்யுவுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக இருந்த ஜகதீஷ் குமார், கடந்த வாரம் யுஜிசி தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தாராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
59 வயதான சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவர் தனது எம்ஃபில் படிப்பை முடித்து சர்வதேச உறவுகள் (International Relations) குறித்த படிப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
சாந்திஸ்ரீ பண்டிட், முதன்முதலாக 1988ல் கோவா பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அதன்பிறகு 1993ல் புனே பல்கலைக்கழகத்திற்கு சென்றார். சாந்திஸ்ரீ மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளையும் வகித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பார்வையாளர்களைப் பரிந்துரைக்கும் உறுப்பினராகவும் முக்கிய பொறுப்புகளில் சாந்திஸ்ரீ பங்கேற்றுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாந்திஸ்ரீ நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், அவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் எனவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட், ஆர்எஸ்எஸ், இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர் என்ற சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
குறிப்பாக மனித உரிமைப் போராளிகளைப் பைத்தியம் பிடித்த ஜிகாதிகள். சீனா அவர்களை ஒழித்தது போல ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் காந்தியை கோட்சே படுகொலை செய்ததை மறைமுகமாக நியாயப்படுத்தினார். மறந்தும் கூட கோட்சேவைக் கொலைகாரன் என்று கூறவில்லை. அதேபோல் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
அவுரங்கசீப் குறித்து மறுக்க முடியாத ஆதாரங்களைத் திரட்டி நூல் எழுதிய ஆட்ரே டஸ்க்கே அவர்களை வேட்டையாடும் விலங்கு என்று அழைத்துப் பெருமைப்படுத்தியவர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்.
உயிர் பிழைக்க இந்தியா வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்துவதை ஆதரித்தார். இனப்படுகொலைகளைக் கூட இவர் ஆதரித்தார் என்று பத்திரிகைச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல் ஒன்றிய அரசின் வேளாண் சட்டத் திருத்தங்களை ஆதரித்து, அதற்கு எதிராகப் போராடிய விவசாயிகளை ஒட்டுண்ணிகள், இடைத்தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் என்று பட்டம் வழங்கினார்.
இதுபோன்று தொடர்ந்து ஆர்எஸ்எஸ், இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வரும் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் தான் இந்தியாவின் தலைசிறந்த ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பல்கலைக் கழகங்களை அழிக்க வேண்டுமானால், நாளந்தா பல்கலைக் கழகத்தை அழித்தது போலத் தீவைக்கத் தேவையில்லை. நவீன இந்துத்துவ இந்தியாவில் அதற்கு வேறு வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.