நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீடூ’ பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாட்டில் இப்போது அரசியல், சினிமா, தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தற்போது தூக்கத்தை தொலைத்து, கதி கலங்கி போயுள்ளனர். அதற்கு காரணம், சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ‘meToo’ என்ற ‘ஹேஸ்டேக்’தான்.
பல ஆண்டுகளுக்கு முன் தங்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றிய ரகசியங்களை பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது இதில் வெளியிட்டு வருகின்றனர். இதில், தங்களால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணாவது பழைய ரகசியத்தை வெளியிட்டு விடுவார்களோ என பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர். இந்த ‘மீ டூ’வில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை கூட பெண்கள் தைரியமாக பதிவிட்டு வருகின்றனர்.
இதில், சினிமா பிரபலங்கள், தொலைக்காட்சி நடிகர்கள் என பலர் சிக்கியுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது அரசியலும் இணைந்து விட்டது. பத்திரிகை துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீதும் சில பெண்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டை, ‘மீ டூ’வில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அடுத்த மாதமும், டிசம்பரிலும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையிலும், அடுத்த மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் இந்த குற்றச்சாட்டு எழுந்திருப்பது பாஜ.வுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பிரச்னையை பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. ‘அக்பர் மீதான குற்றச்சாட்டு குறித்து பாஜ.வும், மத்திய அரசும் சரியான விளக்கம் அளிக்க வேண்டும். அவரை உடனடியாக பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி அளித்துள்ள பேட்டியில், ‘‘இந்த பிரச்னையில் மவுனம் காப்பது தீர்வாகாது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இது, உண்மையில் மிகவும் கவலைப்பட வேண்டிய விவகாரம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரும், பிரதமரும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ப்பால் ரெட்டி கூறுகையில், ‘‘அமைச்சர் அக்பரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார். இதனால், அக்பரின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி உட்பட 6 பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பத்திரிகை நிறுவனத்தில் செய்தி ஆசிரியராக இருந்தபோது அவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அதில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர் மீதே பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளவர்களில் ஒருவர் சுமா ராஹா. பெண் பத்திரிகையாளரான இவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த 1995ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள பெங்கால் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்த செய்தி ஆசிரியர் அக்பரை பேட்டி எடுக்க சென்றேன். அப்போது, அவர் போதையில் இருந்தார். அவரின் செயல்கள் என்னை மிகவும் பாதித்தன’என கூறியுள்ளார்.
அக்பரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மற்றொரு பெண் பத்திரிகையாளரான பிரீனா சிங் பிந்திரா தனது பதிவில், ‘பணி தொடர்பாக கலந்தாய்வு நடத்துவதற்கு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது, நள்ளிரவு இருக்கும். அங்கு நான் நரக வேதனையை அனுபவித்தேன்’ என்று கூறியுள்ளார்.
அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள பத்திரிகையாளர் பிரியா ரமணி கூறுகையில், “அவர் இதை செய்யவில்லை என்றால், இந்த குற்றச்சாட்டில் கண்டிப்பாக அவருடைய பெயர் இடம் பெற்றிருக்காது” என்றார்.
இவ்வாறு 6 பெண்கள் குற்றம் சாட்டிய நிலையில் 70 உறுப்பினர்கள் கொண்ட குழுவுடன் நைஜீரியா சென்றுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர். இன்று நாடு திரும்புகிறார்
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை அவர் எந்தவித பதிலோ, மறுப்போ தெரிவிக்கவில்லை. இன்றுதான் அவர் நாடு திரும்புகிறார். அவர் வந்த பிறகுதான், அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவரும்.