திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைதை கண்டித்து இன்று போராடிய 3 எம்எல்ஏக்கள் உட்பட 96 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவியிடங்கள் கிடைக்க திமுக காரணம் என்று அவர் கூறிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு எதிராக ஆதித்தமிழர் மக்கள் பேரவை தலைவர், கல்யாண், புகார் அளித்து இருந்தார். இப்புகாரை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலை செய்யப்பட்டார். மே 31ம் தேதி வரை, இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை ஆர். எஸ்.பாரதி கைதை கண்டித்து திமுகவினர் சாலையில் நின்று போராடினார்கள். 100க்கும் அதிகமான திமுகவினர் சாலையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வாசிக்க: அரசு தன் மானத்தை அடகு வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது- கமல் காட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கும் போலீசாருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனையடுத்து இன்று சென்னையில் போராட்டம் செய்த எம்எல்ஏ.,க்கள் ரங்கநாதன், ரவீந்தரன், ராஜா உள்ளிட்ட 96 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்படுவது, சட்ட விரோதமாக கூடுவது, ஊரடங்கை மதிக்காமல் செயல்படுவது என்று மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.