ஆரோக்கிய சேது ஆப்பை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தகவல் தெரிவிக்க மறுத்துள்ளது மத்திய அரசு. இது அந்த செயலி மீதான நம்பத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியபோது, தொற்று பரவலை கண்காணிப்பதற்காக மத்திய அரசு சார்பில் ஆரோக்கிய சேது ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதை கோடிக்கணக்கான இந்தியர்கள் மொபைலில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன்மூலம் உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் ஆரோக்ய சேது 7-ம் இடம் பிடித்துள்ளதாகவும் மத்தியஅரசு அறிவித்தது.

இந்த ஆரோக்ய சேது செயலி, தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இந்த வைரஸ் டிராக்கர் செயலியை, இந்தி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் பயன்படுத்தலாம் என்றும், செயலியை பயன்படுத்த புளூடூத் மற்றும் இருப்பிட அணுகல் தேவை. அத்துடன் பயனர்கள் முதலில் தங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டியதும் அவசியமானது. அத்துடன், இந்த செயலியின் Privacy Policy பற்றி கவலைப்படுபவர்களுக்கு, இது சேமிக்கப்பட்ட டேட்டா encrypted என்றும் கூறப்பட்டது.

இந்த செயலியை பயன்படுத்துபவர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நபரின் விவரத்தை உடனடியாக காட்டும். மேலும், கொரோனா இருக்கிறதா என்பதையும் அறிகுறிகளை பதிவிட்டு, உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இனி புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ஆரோக்கிய சேதுவின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த செயலியை பயன்படுத்த செல்போனில் Bluetooth மற்றும் GPS லொகேஷனை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டி இருப்பதால், இதன் மூலம் பயனாளர்களின் நகர்வுகளை கண்காணிக்க முடியும் என புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, இந்த செயலியை பயன்படுத்தும் ராணுவ வீரர்கள் பொறுப்பு பதவி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இது ஆரோக்கிய சேதுவின் மீதான நம்பகத்தன்மை குறித்து மேலும் சந்தேங்களை எழுப்புவதாக அமைந்தது. இது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆரோக்கிய சேது செயலியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். அதுபோல, இந்த செயலி தனிநபர் உரிமை விதிகளுக்கு மாறாக இருப்பதாகவும் இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் அமைப்பு குற்றம் சாட்டியது.

தொடர்ந்து பிரான்ஸை சேர்ந்த ஹேக்கரான எலியட் ஆண்டர்சன், 9 கோடி இந்தியர்களின் அந்தரங்க தகவல் கசியும் ஆபத்துக்கு உள்ளதாக கூறியதோடு மட்டுமன்றி, பிரதமர் அலுவலகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாசிடிவ் என்பது உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஆரோக்கிய சேதுவின் நம்பகத்தன்மை விவாதப்பொருளாக மாறியது.

இந்நிலையில், சமூக ஆர்வலர் சவுரவ் தாஸ் என்பவர் ஆரோக்கிய சேது குறித்த தகவல்களை அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்து கேட்டுள்ளார்.

இதையடுத்து Https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு மத்திய தகவல் ஆணையம் சிபிஐஓ, தேசிய தகவல் மையத்தை கேட்டது.

மனுவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிப்பது சம்பந்தமாக அவரது மனு பல்வேறு துறைகளுக்கு மாற்றி மாற்றி அனுப்பப்பட்டு, சுமார் 2 மாதங்கள் அந்த மனு குறித்து, மத்தியஅரசின் பல்வேறு துறை பதில் தெரிவிக்க மறுத்துள்ளது அம்பலமாகி உள்ளது.

இந்த செயலியை தேசிய தகவல் மையம் உருவாக்கியதாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது ஆர்டிஐ பதிலில், செயலியின் பயன்பாட்டை உருவாக்குவது தொடர்பான முழு கோப்பும் என்ஐசியுடன் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

அதுபோல, ஐ.டி அமைச்சகம் இந்த கேள்வியை தேசிய மின்-ஆளுமை பிரிவுக்கு மாற்றியது, அதில் ‘மனுவில் கோரப்பட்ட தகவல்கள் எங்கள் பிரிவு தொடர்பானது அல்ல’ என்று தனது பங்குக்கு கைகாட்டியுள்ளது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், ‘அதிகாரிகள் தகவல் வழங்க மறுப்பதை ஏற்கமுடியாது. ஆப்பை யார் உருவாக்கியது, தகவல்கள் எங்கே இருக்கின்றன என எந்தவொரு தலைமை பொது தகவல் அலுவலர்களுக்கும் தெரியவில்லை. இது மிகவும் சீரியஸான விஷயம்’ என்று தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் தொடர்புடைய அரசு துறைகள் மத்திய தகவல் ஆணையம் முன் நவம்பர் 24ஆம் தேதி ஆஜராக வேண்டுமென தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கிய சேது விவகாரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

நீட் மருத்துவக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கோளாரு காரணமாக நிறுத்தம்