ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test-TET) சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஒன்றிய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது.
முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2 ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். மேலும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது.
தற்போது இந்த விதிமுறையை மாற்றி ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் (டெட்) ஒருமுறை பெற்றால் வாழ்நாள் முழுவதும் செல்லும் என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறும்போது, ”டெட் தேர்வில் தேர்வு எழுதி வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ், அவர்களின் ஆயுட்காலம் வரை செல்லும். இந்த புதிய விதிமுறையானது, 2011 முதல் ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொருந்தும்.
(2/2) Respective State Govts./UTs to take necessary action to re-validate/issue fresh certificates to candidates whose period of 7 years elapsed already. This is a positive step in increasing the employment opportunities in the teaching field.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 3, 2021
கற்பித்தல் துறையில் தங்களின் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்புகளை இந்த அறிவிப்பு அதிகரிக்கும். 7 ஆண்டுகள் முடிந்து டெட் சான்றிதழ் காலாவதியான நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களை மறுமதிப்பீடு செய்ய அல்லது
புதிய டெட் சான்றிதழ்களை வழங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய, மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (NET/SET) வெற்றி பெற்றோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் அவர்களின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கருத்து கூற 14417 என்ற உதவி எண்- பள்ளிக்கல்வித்துறை