18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்று இந்தோனீஷிய தலைநகர் ஜகார்தாவில் கோலாகலமாக தொடங்கின. அதைத் தொடர்ந்து, முதல் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தியா வலுவானதாக கருதப்படும் மல்யுத்த போட்டியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் 65 கிலோ எடைப்பிரிவில் ஹரியாணாவை சேர்ந்த பஜ்ரங் புனியா களமிறங்கினார்.
முதல்நிலை மற்றும் அதற்கடுத்தடுத்த சுற்றுகளில் முறையே உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், மங்கோலியாவை சேர்ந்த வீரர்களை வென்ற பஜ்ரங், இறுதிச் சுற்றில் ஜப்பான் வீரர் டக்காடானி டாய்ச்சியை 11-8 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
24 வயதாகும் பஜ்ரங் கடந்த 2014ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியின் 61 கிலோ மல்யுத்த பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்ற இந்திய மல்யுத்த வீரர்களான சுஷில் குமார், மௌஸம் காத்ரி, சந்தீப் தோமர் ஆகியோர் தங்களது பிரிவில் நடந்த போட்டிகளில் தோல்வியுற்று பதக்க வாய்ப்பை இழந்தனர்.
ஆனாலும் 10 மீட்டர் கலப்பு துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைபிள்) பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் – அபூர்வி சந்தேலா இணை வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடர்ந்து செய்தனர்