தமிழகத்தில், ஆகஸ்டு 12ந்தேதி முதல், ஆன்லைனில் பொறியியல் கல்லூரிகளின் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், அதற்கான அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால், பல மாநிலங்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே பல தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் டிவி மூலம் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் ஆரம்பமாகும்.
அதன்படி, ஆகஸ்டு 12ந்தேதி முதல் அக்டோபர் 26 வரை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும். செய்முறை தேர்வுகள் அக்டோபர் 18 முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த ஆன்லைன் வகுப்பானது, முதலாமாண்டு மாணவர்களை தவிர, இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நடைபெறும் என்றும், மேலும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சனிக்கிழமைகளிலும் வகுப்பு நடைபெறும்” என்று கூறியுள்ளது.
மேலும் வாசிக்க: பி.இ இறுதியாண்டு தேர்வுகள் இம்மாத இறுதியில் தொடக்கம்… துணைவேந்தர் சூரப்பா