ஆர்கிடெக்ட் அன்வாய் நாயக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர்.
ரிபப்ளிக் டிவி நிர்வாக இயக்குனர் அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமான கான்கார்ட் டிசைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தவர் அன்வாய் நாயக் (53).
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மும்பை அலிபாக் பகுதியில் உள்ள வீட்டில் நாயக் மற்றும் அவரது தாயார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அன்வாய் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அன்வாய் நாயக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி மீது நாயக்கின் மனைவி அக்ஷதா நாயக் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். அன்வே நாயக் இறந்து சுமாராக இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த மே மாதம் 26ந் தேதி மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தற்கொலை செய்து கொண்ட அன்வய் நாயக்கின் மகள் அதன்யா நாயக் எழுப்பிய புதிய புகாரின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதில், அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலையின் பின்னணியில் அர்னாபிற்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (நவம்பர் 4) அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அர்னாப் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் அர்னாபுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அர்னாப் கைது நடவடிக்கையை அன்வாய் நாயக்கின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக பேசிய அவரது மகள் கூறும் போது, “என் அப்பாவுக்கு தர வேண்டிய பணத்தை கேட்ட போது, என் தந்தை அர்னாபால் மிரட்டப்பட்டார்.
எங்களை பின்தொடர்ந்து யாராவது பைக்கில் வருவார்கள். எங்கள் தொலைபேசியை ஒட்டு கேட்பது. வீட்டுக்குள் வந்து சிலர் உட்கார்ந்துகொண்டு மன உளைச்சல் ஏற்படுத்துவார்கள். என்னுடைய வேலை, தொழிலை ஒன்றுமில்லாமல் செய்து விடுவதாக மிரட்டினர்.
என் அப்பா தற்கொலை செய்யும் முன் அர்னாப் பெயரை எழுதி வைத்துவிட்டு இறந்தார். என் அப்பா உயிரிழப்புக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி நாங்கள் ஏறாத இடம் இல்லை. ஆனால் திடீரென்று ஒரு நாள் வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.
தற்போது அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கூறினார்.
ஏற்கனவே டிஆர்பி முறைகேடு தொடர்பாக ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மீது விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
டிஆர்பி மோசடி: ரிபப்ளிக் சேனல் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்