காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாகப் பேசியதாக ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை மீது 3 வாரங்களுக்கு நடவடிக்கை எடுக்கத் இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி 2 சாதுக்கள் உள்பட 3 பேரை குழந்தைகள் கடத்துபவர்கள் என நினைத்து சிலர் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக் சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியில், அதன் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்தி பற்றி தனிப்பட்ட கருத்துகள் சிலவற்றையும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கணக்கான புகார்கள் அளித்தனர். இந்தப் புகாரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அர்னாப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் வாசிக்க: ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய குவியும் புகார்கள்
இதையடுத்து, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி அர்னாப் கோஸ்வாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் , எம்ஆர்.ஷா முன்னிலையில் இன்று அவசர வழக்காக காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது.
அர்னாப் கோஸ்வாமி சார்பில் மூத்த வழக்கிறஞர் முகுல் ரோஹத்கி வாதிடுகையில், அர்னாப் கோஸ்வாமி நிகழ்ச்சியில் அவதூறாக எதுவும் பேசப்படவில்லை. அவருக்கு எதிராக காாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தலைவரை அவதூறு பேசியதாகக் குற்றம் சாட்டி ஏராளமான புகார்களை போலிஸில் அளி்த்து அதில் வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், தனது மனுதாரர் அர்னாப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நள்ளிரவு 12.15 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் தாக்கப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்,
எனவே நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் ஏப்ரல் 21ஆம் தேதி அவர் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக இனிமேல் தொடுக்கப்பட வாய்ப்புள்ள வழக்குகள் ஆகியவற்றிலிருந்து தனது மனுதாரருக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அர்னாப் கோஸ்வாமி தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சோனியா காந்திக்கு எதிராக அவதூறாகப் பேசியவை என்று குற்றம் சாட்டப்படும் வாசகங்களை வாசித்துக் காட்டி, ஒரு தனிமனிதர் குறித்து விமர்சித்த பேச்சு பத்திரிகை சுதந்தரமா.. அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மத வன்முறையை உண்டாக்கும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும், ஏற்கெனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவை விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
சத்தீஸ்கர் மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் தான்கா, அர்னாப் கோஸ்வாமி இம்மாதிரியான கருத்துகளை தெரிவிப்பதில் இருந்து கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறினார்.
ராஜஸ்தான் அரசு சார்பில், ஆஜராகிய அபிஷேக் மனு சிங்வி, அர்னாப்புக்கு பாதுகாப்பு வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அர்னாப் பேசிய வார்த்தைகள் இரு சமூகத்துக்கு இடையே மோதலை உருவாக்கும் வார்த்தைகள். இதை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தரசூட், எம்ஆர் ஷா, “ஊடகங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்ககூடாது. ஊடகங்கள் மீது எவ்விதமான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கும் தாம் எதிரானவன். இந்த வழக்கில் கோஸ்வாமி மீது வழக்கப்பட்ட அனைத்துப் புகார்களையும் ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும்.
மேலும் மனுதாரர் அர்னாப் கோஸ்வாமிக்கு மூன்று வார கால இடைக்கால சட்ட பாதுகாப்பு வழங்குவதாகவும், இந்த மூன்று வார காலத்தில் அவர் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று வார காலத்தில் அர்னாப் கோஸ்வாமி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மூன்று வார காலத்தில் அவர் மீது மேற்கொண்டு எந்த முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட கூடாது என்றும், அர்னாப் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.