அருணாச்சல பிரதேசத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், பைலட்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021ல் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர், தமிழ்நாட்டின் குன்னூர் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதை போன்று இன்னொரு சம்பவம் இன்று (16.03.2023) அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்திருக்கிறது.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டர் ஒன்று, இரு பைலட்களுடன் அலுவல் நிமித்தம் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் போம்டிலா பகுதியை கடந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இன்று காலை நிகழ்ந்த இந்த சம்பவத்தை அடுத்து, உடனடியாக ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
அடுத்த சில மணி நேரங்களில், மண்டலா மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஹெலிகாப்டரில் பயணித்த இரு பைலட்களையும் தேடும் பணி தொடங்கியது. இறுதியில் பைலட் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
லெப்.கர்னர் விவிபி ரெட்டி, மேஜர் ஜெயந்த் என அந்த இரு பைலட்களின் மரணத்தை இன்று மாலை இந்திய ராணுவம் உறுதி செய்தது. பிபின் ராவத் விபத்து போன்றே அருணாச்சல் விபத்திலும், பனி மூட்டமே ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.