அரியர் தேர்வு ரத்து என்னும் அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு, இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத்தேர்வுகளை ரத்து செய்வதாகவும், மேலும் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவித்துள்ளதாகக் கூறி, ராம்குமார் ஆதித்தன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரியர் தேர்வு ரத்து என்னும் அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எவ்வாறு சில பல்கலைக்கழகங்கள் வெளியிட்டன. அத்துடன் அரசாணை மூலம் தேர்வுகளை ரத்து செய்ய எவ்வாறு முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைனிலோ அல்லது நேரடியாகவோ தேர்வு எதுவும் நடைபெறவில்லை. எனவே தேர்வு நடத்தாமல் பல்கலைக்கழகங்கள் முடிவுகளை அறிவிக்கக் கூடாது எனக் கூறி இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு விசாரணை யூடியூபில் வெளியிடபட்டு சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை யூடியூப் சேனலில் ஒளிபரப்பு- நீதிபதிகள் அதிர்ச்சி