அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் அருணாச்சலப் பிரதேசத்தின் மிக உயர்ந்த மலைப்பகுதியான காமேக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உடல்கள் இன்று (8.2.2022) மீட்கப்பட்டுள்ளது என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அருணாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை அளித்தது. தேச சேவைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் தன்னலமற்ற தியாகம் என்றும் நினைவு கூரப்படும். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நமது தேசத்திற்கு அவர்களின் முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்” எனக் கூறியுள்ளார்.