அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்கத்தினரின் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளாக தொடருகிறது.
 
அதிமுக வின் அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறினார்.
 
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.
 
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.
 
நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பெண்கள் உள்பட சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 
சென்னை காமராஜர் சாலையில் எழிலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்து வருகிறது போலீஸ்.
 
புதுகோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாதவர்களுக்கு 17பி நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. மேலும் 7500 ரூ மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது என கூறினார்.
 
மேலும் தமிழகம் முழுவதும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்கத்தினரின் 4-வது நாளாக வேலைநிறுத்தம்  காரணமாக  இது வரை 75000 பேர் கைது என உறுதிபடுத்த படாத போலிஸ் தரப்பு செய்திதள் தெரிவிக்கின்றன ..
 
போராட்டம் குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறும் போது, தற்போது 10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
முதல்வர் எங்களை அழைத்து பேசும்வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என கூறினார்.