சபரிமலை செல்ல வேண்டும் என பெண்கள் ஏன் அடம்பிடிக்க வேண்டும் என நடிகையும், பாஜகவின் கலாச்சார பிரிவு செயலாளராகவும் உள்ள காயத்ரி ரகுராம் சர்ச்சையை எழுப்பியுள்ளார்.
சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அங்கு செல்ல பெண்கள் ஆயத்தமாகினர்.
ஆனால் ஐயப்ப பக்தர்கள் நடத்திய போராட்டம் காரணமாக சபரிமலை சன்னிதானத்துக்கு பெண்கள் செல்வது இன்னும் சாத்தியப்படவில்லை. போராட்டத்தை தாண்டி சன்னிதானம் செல்ல நினைக்கும் பெண் பக்தர்கள் பம்பை நதிக்கரையுடன் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், “ஐயப்பன் மீதும் சபரிமலை கோயில் நடைமுறைகள் மீதும் நம்பிக்கையில்லாத பெண்கள் அங்கு ஏன் செல்ல வேண்டும்.
அரசியல் காரணத்திற்காக அடம்பிடித்து அங்கு சென்று திரும்புகிறீர்கள். நீங்கள் எதை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள் பெண்களே. உங்களுக்கு ஐயப்பன் மீது நம்பிக்கை இருந்தால், பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வருவது போல், 40 வயது கடந்த பிறகு அங்கு செல்ல வேண்டியது தானே” எனக் கூறியுள்ளார். காயத்திரியின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.