தமிழக மின்சார வாரியம் அறிவிப்பின்படி, கடந்த முறை அதாவது பிப்ரவரியில் செலுத்திய மின்சார கட்டணத்தை ஏப்ரல் மாதத்திற்கு செலுத்துமாறு கூறியுள்ளதால், 80 சதவீத மக்கள், இனி அடுத்து எடுக்க உள்ள அளவீட்டிற்கு கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் என்று மின்சார பயனீட்டாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மின் ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளவில்லை. வழக்கமாக 2 மாதத்திற்கு ஒருமுறை வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மின்அளவு கணக்கீடு செய்து, பணம் செலுத்தும் முறை உள்ளது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான மின் கட்டணத்தை ஏப்ரல் மாதம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ரீடிங் எடுக்க ஊழியர்கள் நேரில் வருவதை தவிர்த்து, கடந்த முறை எவ்வளவு பணம் செலுத்தப்பட்டதோ, அதையே இந்த மாதம் செலுத்த வேண்டும் என மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது நடுத்தர வர்க்கத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால் 2 மாதத்திற்கு முன்பு கட்டிய பணம் சீரான இடைவெளியில் சீரான மின்சாரத்தை பயன்படுத்தி வந்ததற்கான கட்டணம். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால், தொலைக்காட்சி, கணினி, லேப்டாப் என்று வழக்கத்தை விட கூடுதலாகவே மின்சாரம் நுகரப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அடுத்த இரண்டு மாதங்களுக்கும் இதே நிலைதான் இருக்கும்.

மேலும் வாசிக்க: தனியாக குழுக்கள் அமைத்து மாநிலங்களை கண்காணிக்கும் மத்திய அரசு

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், 4 மாதங்களுக்கான மின்சார உபயோகத்தை ஒரே நேரத்தில் அளவீடு செய்யும் நிலையில், நடுத்தர குடும்பங்களுக்காண உபயோகம் வழக்கத்தை விட இரண்டு மடங்கு யூனிட்டை தாண்டிவிடும். அந்த நிலையில் இரட்டிப்பு மின் கட்டணம் செலுத்த நேரிடும்.

மேலும் தமிழகத்தில் வீட்டு மின்சார பயன்பாட்டில் முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்படுகிறது.ஆனால் ஊரடங்கு தளர்ந்த பின்னர், மே – ஜூன் மாதத்தில் மட்டுமே அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று மின் அளவீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அப்போது அவர்கள், கடைசி அளவீடு பிப்ரவரி என்பதால், மார்ச் முதல் ஜூன் வரை உள்ள 4 மாதங்களுக்கு மொத்தமாக மின் நுகர்வை குறித்துக்கொள்வார்கள்.

மார்ச் – ஏப்ரலில் மின் அளவீட்டை அதிகாரிகள் நேரடியாக வந்து எடுக்காததால், அந்த மாதத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் நமக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. மார்ச் – ஏப்ரல் மற்றும் மே – ஜூன் ஆகிய 4 மாதங்களுக்கும் சேர்த்து 100 யூனிட்கள் கழிக்கப்படும். இதனால், பயனீட்டாளர்களுக்கு குறைந்த பட்சம் 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான அளவீட்டை அவர்களே எடுத்து, மின்சார வாரியத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது போன்ற நடைமுறையை வீடுகளுக்கும் பயன்படுத்தலாம். மின்சார கட்டணம் தொடர்பான மக்களின் அச்சத்திற்கும், குழப்பத்திற்கும் மின்சார வாரியமே விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.