இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.
 
இதையடுத்து வெற்றி பெற வேண்டிய கட்டயாத்தில் இந்திய அணி இருந்த நிலையில் , இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.
 
237 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா இணை துவக்கம் கொடுத்தது.
 
முதல் ஓவரிலே நைல் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4 ரன்களுக்கு 1 விக்கெட்டுடன் மோசமான துவக்கத்துடன், ரோஹித் ஷர்மாவுக்கு கைகொடுத்து களமிறங்கினார் கோலி. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை 16-வது ஓவரில் ஆடம் ஜம்பா பிரித்தார்.
 
44 ரன்களுடன் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி நடையைக் கட்டினார் கோலி.
 
தொடர்ந்து 20-வது ஓவரில் ரோஹித் வெளியேற, ராயுடுவும் பெரிதாக ரன்களை சோபிக்கவில்லை. 20 ஓவர்களில் 100-4 என்ற ரன்களில் தோனியுடன் கேதர் ஜாதவ் இணைய ஆட்டம் சூடுபிடித்தது.
 
இருவரையும் மைதானத்திலிருந்து வெளியேற்ற முடியாமல் ஆஸி., பந்துவீச்சாளர்கள் திணறினர். தோனி நிதான ஆட்டத்தை 72 பந்துகளில் 59 ரன்கள் எடுக்க , ஜாதவ் பந்துகளை பவுண்டரிகளை விளாசி 87 பந்துகளில் 81 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆட்டமிழக்கமாலிருந்த இருவரும் அணியின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தனர்.
இதையடுத்து இந்திய அணி 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து ஆறு விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.
 
முன்னதாக இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
இதன்படி உஸ்மான் கவாஜா – ஆரோன் ஃபின்ச் ஆகியோர் களமிறங்கினர். இந்தப்போட்டியில் ஷமி முதல் ஓவரை மெய்டன் செய்தார். இரண்டாவது ஓவரை வீசிய பும்ரா ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை காலி செய்தார்.
 
இதை தொடர்ந்து அசத்தலாக பந்துவீசிய பும்ரா, ஷமி இணை கடுமையான நெருக்கடி கொடுத்தனர். ரன்கணக்கை தொடங்குவதற்கு முன்பாக விக்கெட்டைப் பறிகொடுத்ததால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் நிதானம் காட்டினர்.
 
உஸ்மான் கவாஜா – ஸ்டோனிஸ் ஜோடி அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடியை கேதர் ஜாதவ் பிரித்தார். ஸ்டோனிஸ் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த கவாஜா அரைசதம் கடந்தார்.
 
பின்னர் இவர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, இந்தியப் பந்துவீச்சாளர்களின் கை ஓங்கியது.
 
சிறிது நேரம் களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 40 ரன்களில் அவுட்டானார். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பு 236 ரன்கள் எடுத்தது.