முதலீடு தொடர்பான தகவல்களை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரில் அமேசான் நிறுவனத்திற்கு இந்திய வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் (சிசிஐ) ரூ.202 கோடி அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனம் ஃப்யூச்சர் கூப்பன்ஸ் குரூப்பில் முதலீடு செய்ய சிசிஐ அனுமதி கொடுத்திருந்தது. அதனைக் கொண்டு ஃப்யூச்சர் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க அமேசான் ஒப்பந்தம் மேற்கொண்டது.
ஆனால், ஃப்யூச்சர் கூப்பன்ஸ் முதலீட்டுக்கு சிசிஐ அனுமதியைப் பெற அமேசான் நிறுவனம் சில விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. அதாவது இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு செய்ய அந்நிய செலாவணி சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
ஆனால், அமேசான் சில விதிமீறல்களில் ஈடுபட்டதாக சிசிஐக்கு அளிக்கப்பட்டுள்ள புகாரில், சில தகவல்களை வேண்டுமென்றே மறைத்து ஃப்யூச்சர் கூப்பன்ஸ் ஒப்பந்தத்தை அமேசான் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்ட சிசிஐ, அமேசானின் முறைகேட்டை உறுதி செய்தது. இதனால், அமேசானுக்கு ரூ.202 கோடி அபராதம் விதித்து, ஃப்யூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்துடன் அமேசான் செய்துகொண்ட் ஒப்பந்தத்தையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மேலும், அடுத்த 60 தினங்களுக்குள் விரிவான படிவத்தை அமேசான் சமர்பிக்க வேண்டும் எனவும் இந்திய வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அமேசான் தரப்பில் கூறும்போது, நாங்கள் எந்த ஒரு தகவலையும் மறைக்கவில்லை. ஃப்யூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு தடை விதிப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிசிஐ தவறான எதிர்மறையான சமிக்ஞைகளைக் கடத்துகிறது எனத் தெரிவித்துள்ளது.