கொரோனா தொற்று சிகிச்சை பெறுவதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் 2,80,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மும்பை நானாவதியில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்,. அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவை நேற்று திடீர் என்று நானாவதி மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தான் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமிதாப் பச்சன், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.
மேலும் வாசிக்க: தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சம் அடையும் கொரோனா… இன்று 4,807 பேர் பாதிப்பு; 88 பேர் பலி