அமெரிக்காவை தவிர, பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு தொற்று 70% வேகமாக பரவி வருகிறது.

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்துள்ள இந்த புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கனவே பரவிய வைரஸை விட, 70% வேகமாக பரவுகிறது. மேலும், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல வளர்சிதை மாற்றம் அடைந்து இருப்பதையும், ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செப்டம்பரில், தென்கிழக்கு பிரிட்டன் பகுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்தபோது, உருமாற்றம் அடைந்துள்ள இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக, பிரிட்டனில் தொற்று பரவல் அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிரிட்டனின் பல்வேறு பகுதிகளுக்கு, நேற்று முன்தினம் (டிசம்பர் 20) முதல், இம்மாதம் இறுதி வரை, கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை, மக்கள் வீடுகளில் இருந்தபடியே பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். நிலைமை கைமீறிப் போய்விட்டதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதிய வகை தொற்று குறித்து, பிரிட்டன் சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக் கூறியதாவது, புதிய வகை கொரோனா தொற்று, ராக்கெட் வேகத்தில் பரவுகிறது. நிலைமை கட்டுப்பாட்டை மீறி போய்விட்டது. எனவே, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு, இம்மாத இறுதி வரை வெளியேறாமல், பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்துகிறோம்.

தடுப்பூசி முழுமையாக வழங்கப்படும் வரை, இந்த புதிய வைரசை கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. கடந்த, 19 ஆம் தேதி வரை, 3.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவ்வார இறுதிக்குள், 5 லட்சம் பேருக்கு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸின் புதிய வகை திரிபுகள் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அந்த நாட்டுடனான போக்குவரத்திற்கு இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் உட்பட 40க்கும் அதிகமான நாடுகள் தடை விதித்துள்ளன.

நேபாள நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர் ஒலி; 2021 மே மாதம் மீண்டும் தேர்தல்