நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான ஆவணங்களை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபனிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒப்படைத்தார்.
2019 – 2022 ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபன் நியமிக்கப்பட்டு, விரைவில் தேர்தல் தேதியையும் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடமிருந்து தேர்தல் நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்ட நீதிபதி ஈ.பத்மநாபன், விரைவில் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார் என்று நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக பல நடிகர்கள் ஒன்று சேர்ந்திருப்பதாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசும்போது, விஷால் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது. ஆனால் விஷால் யாரையும் மதிக்காமல், தனிப்பட்ட முறையில் இயங்குவது தான் எங்களுடைய கோபத்துக்கு காரணம். அவர் எல்லோரையும் பகைத்துக் கொண்டுவிட்டார்.
கடந்த முறை நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக தான் நாங்கள் அனைவரும் வேலை பார்த்தோம். இதில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ஜே.கே.ரித்தீஷ். பின்னர் சில பிரச்சினைகளின் காரணமாக விஷாலுக்கு எதிராக அவர் செயல்பட்டார். துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். இருந்தாலும் அவரது எண்ணம் நிறைவேறும் வகையில் விஷாலுக்கு எதிராக நாங்கள் அணி திரட்டி வருகிறோம் எனக் கூறினார்.
இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவராக நடிகை ராதிகாவைக் கொண்டு வர வேலைகள் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சங்கத்துக்கு முதன்முறையாக பெண் ஒருவர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் நடிகைகள் குறிப்பாக சங்கத்தில் உறுப்பினராக உள்ள சின்னத்திரை நடிகைகளின் ஆதரவோடு ராதிகா தலைவர் ஆக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.