திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தை ஜாமீன் வழங்கியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, ராயபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட வந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், திமுக தொண்டர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நரேஷ் அளித்த புகாரில், ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 8 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21.2.2022 அன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 25.2.2022 அன்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “என் மீது புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே, என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தது தவறானது. நரேஷ்குமாரின் மருத்துவ அறிக்கையைிலும் அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (3.3.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது, காயமடைந்ததாக கூறப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடும் நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜெயக்குமார் திருச்சியில் தங்கி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் இரண்டு வாரங்கள் புதன், வெள்ளிகிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்நிலையில், ஜெயக்குமார் மீது மூன்றாவதாக போடப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை நில அபகரிப்பு வழக்கில், ஜாமீன் மனுவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.