நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சிறிது நேரத்தில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை வேறு ஒரு வழக்கில் வாரன்ட் இல்லாமல் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தின் போது, வன்முறையை தூண்டும் வகையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவு செய்தாக, சென்னையை சேர்ந்த அமீர் உசேன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒன்று புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், திருமுருகன் காந்தி மீது இந்திய தண்டனை சட்டம் 153, 505 (1),(B), 505(1), (c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே திருமுருகன் காந்தி வெளிநாட்டில் இருந்தார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர். அதை தொடர்ந்து ஜெனிவாவில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு திருமுருகன் காந்தி, விமானம் மூலம் பெங்களூருக்கு வந்தார். அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நேற்று காலையில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் திருமுருகன் காந்தியை நீதிமன்ற காவலில் அடைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன் காந்தியை சைதாப்ேபட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் பிரபாகரன், திருமுருகன் காந்திக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி கைது ெசய்யும் அளவுக்கு என்ன தவறு செய்தார்? சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக கூறப்படும் அந்த வீடியோ பதிவை ஏன் இன்று வரை நீக்கவில்லை. வீடியோ பதிவு செய்து 64 நாட்கள் ஆகியும் ஏன் தற்போது கைது செய்கிறீர்கள்.

 

ஜெனிவாவில் பேசியதற்கு ஏன் இங்கு வழக்கு பதிவு செய்கிறீர்கள் என்று சரமாரியாக போலீசாரிடம் கேள்விகளை கேட்டார். பிறகு வழக்கு விசாரணையை தொடர்ந்து மாஜிஸ்திரேட் பிரபாகாரன் இந்த வழக்கில் எந்தவித முகாந்திரம் இல்லாதால் திருமுருகன் காந்தியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மறுத்து விட்டார். 24 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.

பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன் காந்தியை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து சிறிது நேரம் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடுவித்தனர்.

அப்போது திடீரென ராயப்பேட்டை காவல் நிலைய  ஆய்வாளர் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் திருமுருகனை கைது செய்ய முயன்றனர். அப்போது கைது வாரன்ட் இருந்தால் காட்டுங்கள் நான் வருகிறேன் என்று கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் போலீசார் திருமுருகன் காந்தியிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசாரின் தடையை மீறி பேரணி சென்றதாக போடப்பட்ட வழக்கின் அடிப்படையில்தான் உங்களை கைது செய்கிறோம் என்று கூறி கைது செய்தனர். பிறகு திருமுருகன் காந்தியை போலீசார் ராயப்ேபட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

திருமுருகன் காந்தியை வேறு வழக்கில் போலீசார் கைது ெசய்ய முயன்றபோது அவர் கூறுகையில், ‘‘ஏசி சார் நீங்கள் கோர்ட் ஆர்டரை மீறி பண்றீங்க. விசாரணை முடிந்து வெளியே போகலாம் என்று எழுதி கொடுத்து இருக்கிறீர்கள். என்னை கைது பண்ண போலீசிடம் ஆர்டர் இருக்கா. விசாரணை முடித்து கையெழுத்து போட்டு லக்கேஜுடன் அவர்கள் தான் அனுப்பி வைத்தனர். இந்த அரசின்  காவல் துறையினரால் எனக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கிடையாது’’என்றார்.