ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போவதால் அதிக நெருக்கடி சந்திக்க நேரிடும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களைப் போலவே கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த நேரத்தை கிரிக்கெட் வீரர்கள் தங்களின் குடும்பத்தாருடன் சேர்ந்துள்ள நிகழ்வுகள் மற்றும் விளையாட்டில் தங்களது அனுபவங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு வீரர்கள் ஏலம் நடைபெறும். இதில் சில முக்கியமான வீரர்களை எடுக்க அணி நிர்வாகங்கள் அதிக ஆர்வம் காட்டும். அந்த வரிசையில் இதுவரை நடந்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சின் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015 இல் நடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் யுவராஜ் சிங்கை தற்போதைய டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டில் யுவராஜ் சிங் 14 போட்டிகளில் பங்கேற்று வெறும் 248 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த மாதிரி அதிவிலைக்கு ஏலத்தில் எடுக்கப்படும் போது மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், “இவ்வளவு பெரிய தொகையே மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும். அதற்காக அது அந்த வீரரையே மாற்றும் அளவுக்கு இல்லை. வெற்றிப்படிக்கட்டில் ஏறும் போது, பலர் உங்களை கீழே தள்ளிவிட நினைப்பார்கள்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெரிய தொகை பெற்றுக்கொண்டு சரியாக விளையாடவில்லை என செய்திகள் வெளியாகும். இப்படி செய்திகள் வெளியாகும் போது அது உங்களை பெரிய அளவில் பாதிக்கும். அதனால் இளம் வீரர்களுக்கு எனது அறிவுரை, டிவி பத்திரிகைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்பது தான்” என்றார்.
முன்னதாக, 2002-ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு கேப்டன் கங்குலி டிரெஸ்சிங் ரூமில் இருந்து சட்டையை கழற்றி கையில் வைத்து சுற்றினார். சட்டையை கழற்றியதால் கங்குலி விமர்சனத்திற்கு உள்ளானார்.
அதேபோல், நான் என்னுடைய சட்டையை கழற்றி சந்தோசத்தை வெளிப்படுத்தினேன். இங்கிலாந்தில் குளிர் அடிக்கும் என்பதால் நான் உள்ளே டி-சர்ட் அணிந்திருந்தேன். இதனால் என்னை யாரும் கவனிக்கவில்லை. டி-சர்ட் என்னைக் காப்பாற்றியது என்றார்.