இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் நிறைவு விழா ஜகர்தாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்தவிழாவில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்கிறார். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் நரிந்தர் பத்ரா இதனைத் தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய மகளிர் அணி 20 வருடங்களுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்குச் சென்றது. இந்தப்போட்டியில் 1-2 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வியடைந்தது வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பியது.

முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா அணி வகுப்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஞ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். இந்தப்போட்டியில் இந்திய அணிக்காக அவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 69 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.