நெல்லை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் அதிகாரிகள் அலட்சியத்தால் கோடை மழையில் நனைந்து தேங்கி கிடப்பதாக விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 57 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பல நிலையங்கள், தற்காலிகமாக செயல்படுவதால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை இருப்பு வைக்க போதிய குடோன் வசதியும் இல்லை. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்படுகின்றன.

ஆலடிப்பட்டி கொள்முதல் நிலையத்திற்கு அணைதலையூர், துறையூர், ஆலடிப்பட்டி, புங்கனூர், கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டுவந்து அதிகாரிகள் அலட்சியம் காரணமாக கடந்த 15 நாட்களாக காத்திருந்தும், கோடை மழையில் நெல் மூட்டைகள் நனைந்து விட்டதாக புலம்பி வருகின்றனர்.

நெல்லை அருகே ராஜவல்லிபுரம், ஆலடிப்பட்டி, பாலாமடை உள்ளிட்ட 57 கொள்முதல் நிலையங்களில்  போதிய இடவசதி இல்லாததால் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின்றன.

சில கொள்முதல் நிலையங்களில் பிளாஸ்டிக் சாக்கில் அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகள் வெம்பி கருப்பு நிறத்தில் மாறி விட்டதால் மாடுகளுக்கு கூட கொடுக்க முடியாமல் வீணாகி விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் வராததால் மழையில் நனைந்து நெல் முளைக்க தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஊரடங்கால் அரிசியின் விலை பன்மடங்கு அதிகரித்துவரும் நிலையில், இருப்பிலுள்ள நெல்லை தமிழகஅரசு கொள்முதல் செய்ய போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.